ஒடிஷாவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் எல்கேஜி முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என மாநில முதல்வர் மோகன் சரண் மஜி அறிவித்துள்ளார். இதன் மூலம் கல்வியை முழுமையாக இலவசமாக வழங்கும் முதல் மாநிலமாக ஒடிஷா உருவெடுத்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., சார்பில் மோகன் சரண் மஜி முதல்வராக பொறுப்பேற்றார். ஒடிஷாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு புவனேஸ்வரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மழலையர் கல்வி முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை அரசு கல்வி நிறுவனங்களில் முழுமையாக இலவச கல்வி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்தத் திட்டம் குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.
கல்வியை இலவசமாக வழங்குவது மட்டுமல்லாமல், தரமான கல்வியை வழங்குவதும் முக்கியம் என குறிப்பிட்ட அவர், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துதல் மற்றும் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் ‘கோதாவரிஷ் மிஸ்ரா ஆதர்ஷ்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக தெரிவித்தார்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 26,615 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 45,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒடிஷாவின் கிராமப்புறங்களில் 18 புதிய அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட உள்ளன. எதிர்காலத்தில் ஒடிஷாவை கிழக்கு இந்தியாவின் உயர்கல்வி மையமாக மாற்றுவதே அரசின் நோக்கம் என மோகன் சரண் மஜி தெரிவித்தார்.
