தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவுக்கு பதிலளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் Vijay தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா கடந்த மே 10ஆம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்வில் முதலில் வந்தே மாதரம் பாடலும், பின்னர் தேசிய கீதமும் இசைக்கப்பட்டு, அதன்பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த நடைமுறை பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சென்னை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழ்த்தாய் வாழ்த்து என்பது ஒரு சடங்கு மட்டுமல்ல; தமிழர்களின் உணர்வு, பண்பாடு மற்றும் அடையாளத்தின் பிரதிபலிப்பாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என வலியுறுத்தும் மத்திய அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் கலாசார ரீதியான கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க, தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கான உரிய நிர்வாக வழிகாட்டுதல்களை அரசுகள் பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி S. A. Dharmadhikari மற்றும் நீதிபதி G. Arul Murugan அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கை பரிசீலித்த நீதிபதிகள், மனுவுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
