ஐஸ்லாந்துடன் வர்த்தக உறவு புதிய உத்வேகம் பெறும்: பிரதமர் மோடி
ஓஸ்லோ: ஐஸ்லாந்துடனான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் புதிய உத்வேகத்தை பெறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் நெதர்லாந்துடன் இந்தியா 17 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. மேலும் அந்த நாட்டின் உயரிய விருதும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற இந்தியா – நார்டிக் 3வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த மாநாட்டில் நார்வே, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் போது ஐஸ்லாந்து பிரதமர் Kristrún Frostadóttir-ஐ பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:
“ஐஸ்லாந்து பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பு மிகவும் சிறப்பானதாக இருந்தது. ஐஸ்லாந்துடனான நட்புறவை இந்தியா மிகுந்த மதிப்புடன் பார்க்கிறது.
மீன்வளம், புவிவெப்ப ஆற்றல், கார்பன் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசித்தோம். குறிப்பாக நீல பொருளாதாரத் துறையில் ஐஸ்லாந்து கொண்டுள்ள திறன் பாராட்டத்தக்கது.
இந்தியா – ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு (EFTA) மற்றும் வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (TEPA) மூலம் வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகள் மேலும் வலுப்பெற்று புதிய உத்வேகம் பெறும் என்று நம்புகிறோம்,” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
