படையினரின் வீரத்தால் நக்சலிசம் ஒழிந்தது: அமித்ஷா பெருமிதம்
ராய்ப்பூர்: பாதுகாப்புப் படையினரின் வீரதீரச் செயல்கள் மற்றும் தியாகங்களின் காரணமாக, நாட்டில் இருந்து நக்சலிசம் மார்ச் 31 காலக்கெடுவுக்கு முன்பே முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நடைபெற்ற மத்திய மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு அமித்ஷா உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், “பாதுகாப்புப் படையினரின் வீரம், துணிச்சல் மற்றும் உன்னத தியாகத்தின் பலனாக, 2026 மார்ச் 31 காலக்கெடுவுக்கு முன்பே நாட்டில் இருந்து நக்சலிசம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “2026 மார்ச் 31க்கு பிறகு நான் முதன்முறையாக பஸ்தருக்கு வருகை தந்துள்ளேன். இங்கு மக்கள் மத்தியில் உற்சாகம், நம்பிக்கை மற்றும் எதிர்காலம் குறித்த நம்பிக்கை நிறைந்த சூழல் காணப்படுகிறது. அச்சம் மற்றும் துப்பாக்கி நிழலில் வாழ்ந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது,” என்றார்.
பஸ்தர் பகுதி தற்போது நக்சல் அச்சுறுத்தல் இல்லாத பகுதியாக மாறியிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்றும், சில முக்கிய தேதிகள் இந்த மாற்றத்திற்கு காரணமாக அமைந்ததாகவும் அமித்ஷா குறிப்பிட்டார்.
2023 டிசம்பர் 13ஆம் தேதி சத்தீஸ்கரில் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பாஜ அரசு அமைந்தது முக்கியமான திருப்பமாக இருந்ததாகவும், மத்திய அரசுடன் இணைந்து நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், நக்சல் ஒழிப்பில் பல பாஜ அல்லாத மாநில அரசுகள் ஒத்துழைத்த போதிலும், முன்னாள் காங்கிரஸ் அரசு முழுமையான ஆதரவு அளிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
2024 ஆகஸ்ட் 24ஆம் தேதி அனைத்து மாநில டிஜிபிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில், 2026 மார்ச் 31க்குள் நாட்டை நக்சல் பயங்கரவாதத்திலிருந்து முழுமையாக விடுவிப்போம் என அறிவித்ததாகவும், அந்த இலக்கு முன்கூட்டியே நிறைவேறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகளில் உயிர்நீத்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அமித்ஷா, நக்சல் வன்முறையால் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவித்தார்.
“எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாக இருக்க முடியாது. ஒரு காலத்தில் துப்பாக்கி நிழலில் இருந்த பகுதிக்கு இப்போது வளர்ச்சி வந்து சேர உள்ளது. ரேஷன் அட்டைகள், இலவச உணவுத் திட்டம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இப்போது மக்களுக்கு கிடைக்கும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இப்பகுதியில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், பழங்குடியின மக்கள் சிறிய தேவைகளுக்காக தொலைதூரம் செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது என்றும், நாட்டின் வளர்ச்சியில் பெண்களும் சம பங்காளிகளாக மாறுவார்கள் என்றும் அமித்ஷா கூறினார்.
