பியாங்யாங்: ஏவுகணை உற்பத்தித் திறனை இரண்டரை மடங்கு அதிகரிக்குமாறு வடகொரியாவின் முன்னணி பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு தலைவர் Kim Jong Un உத்தரவிட்டுள்ளார்.
வடகொரிய ஆளும் தொழிலாளர் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘ரோடாங் சின்முன்’ வெளியிட்டுள்ள செய்தியில், கிம் ஜாங் உன் முக்கிய பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ஆலையொன்றுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளின் உற்பத்தித் திறனை 2.5 மடங்கு அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான திட்டங்கள் அடங்கிய விரிவான அறிக்கையும் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆய்வின்போது பேசிய கிம் ஜாங் உன், ஏவுகணைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதற்கேற்ப உற்பத்தி திறனையும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், விரைவில் நடைபெற உள்ள 9வது மத்தியக் குழு கூட்டத்தில் உற்பத்தி விரிவாக்கம் தொடர்பான முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
