இந்திய ஆடவர் ‘ஏ’ அணி, வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியுடன் முக்கியமான தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இரண்டு நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளும், மூன்று லிஸ்ட் ஏ போட்டிகளும் இடம்பெறுகின்றன.
பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த அனைத்து போட்டிகளும் புதுச்சேரியில் நடைபெறவுள்ளன. தொடர் செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11ஆம் தேதி வரை நடைபெறும்.
முதல் நான்கு நாள் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 22 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து 50 ஓவர்கள் கொண்ட லிஸ்ட் ஏ போட்டிகள் அக்டோபர் 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளன.
இதற்கிடையில், ஜிம்பாப்வே மகளிர் அணி அக்டோபர் 16 முதல் 28ஆம் தேதி வரை இந்திய மகளிர் அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த தொடரில் மூன்று டி20 போட்டிகள் ராய்பூரிலும், மூன்று ஒருநாள் போட்டிகள் பரோடாவிலும் நடைபெறுகின்றன.
மேலும், இந்திய மகளிர் ‘ஏ’ அணி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் ‘ஏ’ அணிகளுடன் தனித்தனியாக தொடர்களில் விளையாட உள்ளது. இரு அணிகளுடனும் தலா 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் ‘ஏ’ அணி களமிறங்கவுள்ளது.
