மாணவர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது தெரிவித்த தனது கருத்துகள் ஊடகங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஐநா சர்வதேச வர்த்தக சட்ட ஆணைய (UNCITRAL) மாநாட்டில் உரையாற்றிய அவர், நீதி கோரி வரும் அனைவருக்கும் உச்ச நீதிமன்றத்தின் கதவுகள் வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் என்று தெரிவித்தார்.
முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், அவற்றை விசாரிக்க நீதிமன்றம் ஒருபோதும் மறுப்பதில்லை என்றும் அவர் கூறினார். குறைகள் உள்ள எவரும் நீதிமன்றத்தை அணுகலாம். ஆனால், மனுக்கள் உரிய நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், அதனை வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மாணவர்கள் போராட்டம் குறித்த தனது கருத்துகளை ஊடகங்கள் தவறாக மேற்கோள் காட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, அவசர வழக்காக கூறி மனு தாக்கல் செய்யாமல் வாய்மொழியாக முறையிட்ட இளம் வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்கும் நோக்கிலேயே அந்தக் கருத்துகளை தெரிவித்ததாக விளக்கம் அளித்தார்.
மேலும், உண்மையான அவசரத் தேவையுள்ள மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்படுகின்றன என்றும், வெள்ளிக்கிழமை குறிப்பிடப்பட்ட இரண்டு மனுக்களும் வரும் ஜூலை 27-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் போராட்டம் மற்றும் அதனைச் சார்ந்த பிற விவகாரங்கள் குறித்து நீதிமன்ற விசாரணையின் போது உரிய முறையில் கருத்து தெரிவிக்கப்படும் என்றும், அதற்கு முன்பாக மேலதிக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.
