முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு வீட்டில் நடைபெறும் சோதனைக்கு அவர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார். சட்டப்படி இந்த விவகாரத்தை எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் தனது தரப்பு நியாயத்தை நிரூபிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், திமுக ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட எந்த ஊழல் வழக்கிலும் இதுவரை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றார்.
ஆளும் கட்சியினரின் மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது என்றும், இதைவிடக் கடுமையான அரசியல் சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்ற அனுபவம் திமுகவுக்கு இருப்பதாகவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
