பீஜிங்: சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக, உலகம் மீண்டும் காட்டாட்சியை நோக்கி திரும்பும் அபாயம் உள்ளதாக Russia மற்றும் China கூட்டாக எச்சரித்துள்ளன.
ரஷ்ய அதிபர் Vladimir Putin இரண்டு நாள் அரசு முறை பயணமாக சீனா சென்றார். அங்கு சீன அதிபர் Xi Jinping உடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகம், எரிசக்தி ஒத்துழைப்பு, Iran மற்றும் Ukraine தொடர்பான விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ரஷ்யா – சீனா சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், “சர்வதேச சூழ்நிலை மிகவும் சிக்கலானதாக மாறி வருகிறது. உலக அமைதி மற்றும் வளர்ச்சி தொடர்பான முயற்சிகள் புதிய அபாயங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றன,” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், “சர்வதேச சமூகம் சிதறுண்டு போகும் அபாயம் உருவாகியுள்ளது. உலகம் மீண்டும் காட்டாட்சியை நோக்கி திரும்பும் நிலையும் உருவாகக்கூடும்,” என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சில நாடுகள் சர்வதேச விவகாரங்களை ஒருதலைப்பட்சமாக கட்டுப்படுத்த முயற்சிப்பதுடன், தங்களது நலன்களை உலக நாடுகள் மீது திணிக்கவும், பிற நாடுகளின் வளர்ச்சியை தடுக்கவும் செயல்படுகின்றன என்றும் கூட்டறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
