அறுவை சிகிச்சையின் தந்தை என போற்றப்படும் இந்திய மருத்துவ அறிஞர் மகரிஷி சுஷ்ருதருக்கு ஸ்காட்லாந்தின் தலைநகர் எடின்பர்க்கில் வெண்கல சிலை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. உலகின் புகழ்பெற்ற மருத்துவ கல்வி நிறுவனங்களில் ஒன்றான ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் ஆப் எடின்பர்க் வளாகத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாரணாசியில் வாழ்ந்த சுஷ்ருதர், தனது ‘சுஷ்ருத சம்ஹிதா’ என்ற மருத்துவ நூலின் மூலம் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ முறைகள் குறித்து விரிவாக பதிவு செய்துள்ளார். 184 அத்தியாயங்களை கொண்ட இந்த நூலில் நூற்றுக்கணக்கான நோய்கள், மருத்துவ தாவரங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சிலையை ஸ்காட்லாந்துக்கான இந்திய தூதர் சித்தார்த் மாலிக் திறந்து வைத்தார். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரா செருவு தனது சொந்த செலவில் இதை நிறுவியுள்ளார். தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்த சிற்பிகள் வடிவமைத்த இந்த 90 கிலோ வெண்கல சிலை, இந்தியாவின் தொன்மையான மருத்துவ பாரம்பரியத்திற்கு கிடைத்துள்ள முக்கிய சர்வதேச அங்கீகாரமாக கருதப்படுகிறது.
