புதுடில்லி: உலக அரங்குகளில் தமிழின் மகத்துவத்தையும் அதன் தொன்மையையும் தொடர்ந்து எடுத்துரைத்து தமிழுக்கு பெருமை சேர்த்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் பதிப்பக பிரிவு வெளியிட்ட தமிழ் கலாசாரம், பாரம்பரியம், கட்டடக்கலை, இலக்கியம் மற்றும் பங்கிம் சந்திர சாட்டர்ஜி தொடர்பான 13 புத்தகங்களை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
இந்த நூல்கள் ராமேஸ்வரம் மற்றும் ராமானுஜன் முதல் பண்டைய துறைமுக நகரமான அரிக்கமேடு வரை தமிழின் பல்வேறு வரலாற்று மற்றும் கலாசார அம்சங்களை உள்ளடக்கியவை. மேலும் பக்தி இலக்கியம், சங்ககால இசைக்கருவிகள், மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில் போன்ற கட்டடக்கலை சிறப்புகளையும் இந்த நூல்கள் எடுத்துரைக்கின்றன.
விழாவில் பேசிய துணை ஜனாதிபதி, தமிழின் பாரம்பரியம், அறிவியல் சிந்தனை, கலை மரபு மற்றும் சமூக பார்வையை வெளிப்படுத்தும் முக்கிய நூல்களாக இவை அமைந்துள்ளன என்றார்.
இந்தியா பல மொழிகளைக் கொண்ட நாடாக இருந்தாலும் அதன் ஆன்மா ஒன்று தான் என்றும் அவர் கூறினார்.
“வசுதைவ குடும்பகம்” மற்றும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” போன்ற தத்துவங்கள் நாட்டை ஒன்றிணைக்கும் நாகரிக மதிப்புகளை பிரதிபலிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலக அரங்குகளில் தமிழின் பெருமையை பிரதமர் மோடி தொடர்ந்து எடுத்துரைத்து வருவது தமிழுக்கு பெருமை சேர்க்கும் செயலாகும் என்றும் அவர் பாராட்டினார்.
