புதுடில்லி: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஈரான் தொடர்பான போர் விவகாரத்தில், மத்திய அரசு மவுனமாக இருப்பது கோழைத்தனம் அல்ல; அது ஒரு சிறந்த ராஜதந்திர அணுகுமுறை என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய பிராந்தியத்தில் நடைபெற்று வரும் இந்த மோதல் குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி லோக்சபா உறுப்பினருமான சசி தரூர் தனது கருத்தை வெளியிட்டார்.
இந்த போரை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் நியாயப்படுத்த முடியாது என்றும், இது இறையாண்மை போன்ற அடிப்படை கொள்கைகளுக்கு முரண்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், இந்த சூழலில் இந்தியா எந்தவித அவசரமான பதிலும் அளிக்காமல் நிதானமாக செயல்படுவது சரியான முடிவு என அவர் விளக்கினார். மத்திய அரசின் மவுனம், போரை ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்தபோது, இந்தியா உடனடி இரங்கல் தெரிவிக்காதது கண்டிக்கத்தக்கது அல்ல என்றும், உலகநீதிக்கு குரல் கொடுப்பதோடு நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பது முக்கியம் என்றும் தெரிவித்தார்.
மேலும், உலக நாடுகளுடன் கொள்கை முரண்பாடுகள் ஏற்பட்டபோது இந்தியா பலமுறை மவுனத்தைத் தேர்வு செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்தப் போர் தொடர்ந்தால், வளைகுடா அரபு நாடுகளில் இந்தியாவுக்கு பொருளாதார மற்றும் மனிதநேய இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆண்டுதோறும் பெருமளவு வர்த்தகம் இந்த பிராந்தியத்தின் மூலம் நடைபெறுகிறது. மேலும், இந்தியாவின் எரிசக்தி தேவைகள் வளைகுடா எண்ணெய் மற்றும் எரிவாயுவை சார்ந்துள்ளன.
அதோடு, அங்கு வசிக்கும் சுமார் 90 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பும் முக்கியம் என அவர் வலியுறுத்தினார். எனவே, மத்திய அரசு மவுனம் காப்பது ஒரு பலவீனம் அல்ல; அது நுண்ணறிவு கொண்ட ராஜதந்திரம் என்றும் தெரிவித்தார்.
அவசரமாக எடுக்கப்படும் முடிவுகள் கோடிக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், நிதானமாக செயல்படுவது தேச நலனுக்காக அவசியம் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், ஆப்பரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை சசி தரூர் பாராட்டி வருவது, காங்கிரஸ் கட்சிக்குள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
