ரியாதில், ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு எதிராக சவுதி அரேபியா கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
வளைகுடா நாடுகளின் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களை கண்டித்த சவுதி வெளியுறவு அமைச்சகம், ஈரான் தூதரகத்தில் பணியாற்றும் ஐந்து பேரை ‘விரும்பத்தகாத நபர்கள்’ (persona non grata) என அறிவித்துள்ளது.
அவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் சவுதி அரேபியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத், தாக்குதல்கள் தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகும் என எச்சரித்திருந்தார்.
ஆனால், ஈரான் தாக்குதல்களை தொடர்ந்த நிலையில், இந்த கடுமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஈரானின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானங்களையும் மீறுவதாக சவுதி குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், இந்த தாக்குதல்கள் இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கும் எதிரானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தயார் என சவுதி அரசு எச்சரித்துள்ளது.
இந்த நிலைமை காரணமாக, வளைகுடா பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாகவும், எதிர்கால தூதரக உறவுகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
