வாஷிங்டன்: ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதையோ அல்லது வைத்திருப்பதையோ நிரந்தரமாக கைவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேற்காசிய நாடான ஈரானுடனான போரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி இறுதியில் ஈடுபட்டன. போர் தீவிரமடைந்த நிலையில், அமைதி ஒப்பந்தத்தை நோக்கி கடந்த மாதம் தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. பாகிஸ்தானில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை. தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கும் புதிய அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிரம்ப் கூறுகையில், “ஈரான் ஒருபோதும் அணு ஆயுதமோ அல்லது அணுகுண்டோ வைத்திருக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்து நடைபெறுவதற்காக, எந்தவித சுங்கக் கட்டணங்களும் இன்றி அந்தப் பகுதி உடனடியாக திறக்கப்பட வேண்டும்.
அங்கு ஏதேனும் கண்ணிவெடிகள் இருந்தால் அவை அனைத்தும் செயலிழக்கச் செய்யப்பட வேண்டும். எங்களின் நீருக்கடியில் இயங்கும் கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் மூலம் இதுபோன்ற பல கண்ணிவெடிகள் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள கண்ணிவெடிகளையும் ஈரான் உடனடியாக அகற்ற வேண்டும்.
எங்களின் கடற்படை முற்றுகையால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சிக்கியுள்ள கப்பல்கள் மீண்டும் சுதந்திரமாக பயணிக்க முடியும். கப்பல் போக்குவரத்து விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்” என்று தெரிவித்தார்.
