வாஷிங்டன்: ஈரான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் எதிர்காலத்தில் இன்னும் கடுமையான மற்றும் ஆக்ரோஷமான தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானுடனான போர் மற்றும் பேச்சுவார்த்தை நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்கா தொடர்ந்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும், “இன்று எங்களது 3 போர்க் கப்பல்களை பயன்படுத்தி முக்கிய இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினோம். இதில் எங்களது கப்பல்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அவர்களது சில சிறிய படகுகள் அழிக்கப்பட்டன” என்றும் கூறினார்.
“ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க அமெரிக்கா ஒருபோதும் அனுமதி வழங்காது. அதனை ஈரானும் ஏற்றுக்கொண்டுள்ளது. அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக உள்ளார்களா என்பதை பார்க்க வேண்டும்” என டிரம்ப் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் நடைபெற்று வருவதாகவும், “என்னை விட அவர்களே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட அதிக ஆர்வமாக உள்ளனர்” என்றும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், “ஈரான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் எதிர்காலத்தில் இன்னும் கடினமாகவும் ஆக்ரோஷமாகவும் தாக்குதல் நடத்தப்படும். அப்போது என்ன நடந்தது என்று விசாரிக்க தேவையில்லை; ஈரானில் இருந்து பெரிய தீப்பிழம்பு எழுவது மட்டுமே தெரியும்” என டிரம்ப் கடுமையாக எச்சரித்தார்.
மேலும், “எனவே அவர்கள் இந்த ஒப்பந்தத்தில் விரைவாக கையெழுத்திடுவது அவர்களுக்கே நல்லது” என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
