நாசிக்: மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் நடைபெற்றதாக கூறப்படும் மதமாற்றம் மற்றும் பாலியல் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த நிடா கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் டி.சி.எஸ். நிறுவனத்தின் பிபிஓ அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்கள் நடைபெறுவதாக கடந்த பிப்ரவரி மாதம் புகார்கள் எழுந்தன. இதையடுத்து நாசிக் போலீசார் ரகசிய விசாரணையை தொடங்கினர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, நான்கு பெண் போலீசார் உட்பட சிலர் தூய்மை பணியாளர்களாக அந்த அலுவலகத்தில் பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த ரகசிய விசாரணையில், மலேஷியாவைச் சேர்ந்த இம்ரான் என்ற மதபோதகருடன் சில ஊழியர்கள் தொடர்பில் இருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சில டீம் லீடர்கள் மற்றும் ஊழியர்கள், சக ஊழியர்களை முஸ்லிம் நடைமுறைகளை பின்பற்றும்படி தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த வழக்கில் மனித வள மேலாளராக பணியாற்றிய நிடா கான் முக்கிய குற்றவாளி என போலீசார் தெரிவித்துள்ளனர். 25 வயதான அவர், 2021ஆம் ஆண்டு டி.சி.எஸ். நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பணியில் சேர்ந்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய மதமாற்றம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 9 புகார்களில் நிடா கான் முக்கிய தொடர்புடையவர் என விசாரணையில் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, டி.சி.எஸ். நிறுவனம் அவரை இடைநீக்கம் செய்தது. கடந்த 25 நாட்களாக தலைமறைவாக இருந்த நிடா கான் இன்று சத்ரபதி சம்பாஜி நகரில் கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
