டெஹ்ரான்: ஈரானில் தேசிய மல்யுத்த அணியில் இடம் பெற்ற இளைஞர் உட்பட மூன்று பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில், பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் முன்பே மக்கள் போராட்டங்கள் நடைபெற்றன. அரசுக்கு எதிரான இந்த போராட்டங்களில் பலர் உயிரிழந்ததாகவும், பல்வேறு நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த போராட்டங்களின் போது போலீஸ் அதிகாரிகள் இருவர் கொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டி மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அந்த தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 19 வயதான சலே முகமதி என்ற இளைஞரும் உள்ளார். இவர் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் என்றும் கூறப்படுகிறது.
போராட்டத்தில் பங்கேற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், “கடவுளுக்கு எதிரான போர்” என்ற சட்டப்பிரிவின் கீழ் இவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், ஈரானில் போராட்டக்காரர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
