ஈரானின் முக்கியமான நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசியாவில் அணுசக்தி அச்சுறுத்தலை காரணம் காட்டி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த 28ம் தேதி ஈரானுக்கு எதிராக போரை தொடங்கின. இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகளில் உள்ள எரிவாயு நிலையங்கள் மற்றும் மேற்காசியப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ஈரானின் நடன்ஸ் அணு ஆயுத செறிவூட்டும் மையம் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானதாக ஈரானின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும், அந்த இடத்தில் கதிர்வீச்சு கசிவு எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
நடன்ஸ் அணுசக்தி நிலையம் டெஹ்ரானுக்கு தென்கிழக்கே சுமார் 220 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள முக்கிய யுரேனியம் செறிவூட்டல் மையமாகும். இது நிலத்தடியில் 40 முதல் 50 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் படி, இது ஈரானின் முதன்மை செறிவூட்டல் தளமாக செயல்பட்டு வருகிறது.
போரின் தொடக்கத்திலேயே குறிவைக்கப்பட்ட இந்த மையம், சமீபத்திய தாக்குதலில் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. செயற்கைக்கோள் படங்கள் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதை வெளிப்படுத்துகின்றன.
இந்நிலையில், ஈரானில் ராணுவ நடவடிக்கைகளை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தனது இருப்பை வலுப்படுத்தும் வகையில் கூடுதலாக மூன்று நீர்நிலத் தாக்குதல் கப்பல்கள் மற்றும் 2,500 கடற்படை வீரர்களை அமெரிக்கா அங்கு நிலைநிறுத்தியுள்ளது.
அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெறுவதால், இந்த மோதல் மேலும் ஆபத்தான நிலைக்கு செல்லும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
