புதுடில்லியில், தடையில்லா கப்பல் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியானிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஈரான் நடத்தி வரும் போர் 22வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு நாட்டுத் தலைவர்களும் தொலைபேசி மூலம் உரையாடினர். அப்போது, மேற்காசியப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற்றது.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஈரான் அதிபருடன் உரையாடியதாகவும், ரம்ஜான் மற்றும் வசந்த கால தொடக்கத்திற்கான வாழ்த்துகளை பகிர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பண்டிகைக் காலம் மேற்காசியப் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை ஏற்படுத்தும் என இருநாட்டு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும், ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய தாக்குதல்கள் பிராந்திய நிலைத்தன்மையை சீர்குலைப்பதோடு, உலகளாவிய விநியோகச் சங்கிலியையும் பாதிக்கின்றன என குறிப்பிடப்பட்டது.
பாதுகாப்பான மற்றும் தடையில்லாத கடல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
அதேபோல், ஈரானில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக அந்நாட்டு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேற்காசியாவில் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், இந்த இரு நாட்டுத் தலைவர்களின் உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
