இந்தியாவை ஆன்மிக வல்லரசாக மாற்ற வழிகாட்டுகிறார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்: பட்னவிஸ்
பெங்களூரு: இந்தியாவை ஆன்மிக வல்லரசாக மாற்றும் பாதைக்கு குருஜி Sri Sri Ravi Shankar வழிகாட்டி வருகிறார் என்று மஹாராஷ்டிரா முதல்வர் Devendra Fadnavis புகழாரம் சூட்டியுள்ளார்.
பெங்களூருவில் அமைந்துள்ள Art of Living Foundation அமைப்பின் 45வது ஆண்டு விழாவும், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் 70வது பிறந்த நாள் விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா கவர்னர் Ashim Kumar Ghosh, ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் Dattatreya Hosabale, தேசிய மகளிர் ஹெவிவெயிட் சாம்பியன் நுபுர் ஷியோரன் மற்றும் மத்திய இணை அமைச்சர் ரக்ஷா காட்சே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய தேவேந்திர பட்னவிஸ், “இந்தியாவை விஸ்வகுருவாக பார்க்கும் கனவு பொருளாதார அல்லது ராணுவ வலிமையில் மட்டும் அமைந்ததல்ல. அது ஆன்மிக சக்தியில் வேரூன்றியுள்ளது. அந்த ஆன்மிக வல்லரசாக இந்தியா மாறுவதற்கான பாதையை குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் காட்டி வருகிறார்” என்று தெரிவித்தார்.
மேலும், “உலகின் கவனத்தை இந்தியாவின் ஆன்மிக சிந்தனை, ஞானம் மற்றும் பாரம்பரிய அறிவு நோக்கி திருப்புவதற்காக அவர் தொடர்ந்து உழைத்து வருகிறார்” என்றும் பாராட்டினார்.
மஹாராஷ்டிராவில் நீர் பாதுகாப்பு மற்றும் இயற்கை விவசாய துறைகளில் ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பு மேற்கொண்ட பணிகள் மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இயற்கை விவசாயம் மூலம் பல விவசாயிகள் புதிய நம்பிக்கையை பெற்றுள்ளனர். தங்கள் வாழ்க்கையை தாங்களே மாற்றிக் கொள்ளும் சக்தியை குருஜியின் வழிகாட்டுதலால் பெற்றுள்ளனர்” என்றும் தெரிவித்தார்.
அதேபோல், “எங்கு பேரிடர் ஏற்பட்டாலும் அங்கு ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் தன்னார்வலர்கள் சேவையாற்றி வருகின்றனர்” என்றும் பட்னவிஸ் கூறினார்.
இதனிடையே, ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ் பேசுகையில், “45 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மண்ணில் குருஜி ஏற்றிய ஆன்மிக தீபம் இன்று 182க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிர்கிறது. அது கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை தொட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
மேலும், “குருஜி உலகிற்கு வெறும் அறிவை மட்டும் வழங்கவில்லை; மன அழுத்தத்தை அமைதியாகவும், நம்பிக்கையின்மையை நம்பிக்கையாகவும் மாற்றும் ஒரு ஆன்மிக பாதையையே வழங்கியுள்ளார்” என்றும் அவர் பாராட்டினார்.
