சோழர் கால ஆனைமங்கலம் செப்பேடுகளை இந்தியாவிடம் ஒப்படைத்த நெதர்லாந்து
தி ஹேக்: வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை நெதர்லாந்து அரசு இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்தியா காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த காலத்தில், நாட்டின் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கலைப்பொருட்கள், சிற்பங்கள் மற்றும் ஆவணங்கள் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அத்தகைய பாரம்பரியச் செல்வங்களை மீண்டும் தாய்நாட்டிற்கு கொண்டு வர தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது நெதர்லாந்தில் பாதுகாக்கப்பட்டு வந்த சோழர் கால ஆனைமங்கலம் செப்பேடுகள் இந்தியாவுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளன.
ஐந்து நாடுகள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற பிரதமர் மோடி, பின்னர் நெதர்லாந்துக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு நெதர்லாந்து மன்னர் வில்லேம் அலெக்சாண்டர் மற்றும் மகாராணி மேக்சிமாவை சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்கள் பிரதமர் மோடியிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.
வரலாற்று முக்கியத்துவம்
ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில், ஸ்ரீவிஜய நாட்டு மன்னர் விஜயதுங்க வர்மன், தனது தந்தையின் பெயரில் நாகப்பட்டினத்தில் அமைந்த சூடாமணி புத்த மடாலயத்திற்கு ஆனைமங்கலத்தைச் சுற்றியுள்ள 26 கிராமங்களை தானமாக வழங்கியதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த தான விவரங்களை முதலாம் ராஜேந்திர சோழன் 21 செப்பேடுகளில் பதிவு செய்திருந்தார்.
இதில் 5 செப்பேடுகள் சமஸ்கிருதத்திலும், 16 செப்பேடுகள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. சமஸ்கிருதப் பகுதிகளில் சோழ மன்னர்களின் வரலாறும், தமிழ்ப் பகுதிகளில் சோழ வம்சம் மற்றும் தான விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த செப்பேடுகள் சோழர்களின் புலிச்சின்னம், இரட்டை விளக்குகள் மற்றும் மீன் வடிவங்கள் கொண்ட முத்திரை வளையத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், ராஜேந்திர சோழனின் பேரனான முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் புத்த மடாலயத்திற்கு வழங்கப்பட்ட தானங்களை உறுதிப்படுத்தும் வகையில் மேலும் 3 செப்பேடுகளும் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நெதர்லாந்திற்கு எப்படி சென்றது?
18ம் நூற்றாண்டில் நாகப்பட்டினம் பகுதி டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, இந்த செப்புப் பட்டயங்கள் நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
பின்னர் அவை லைடன் பல்கலைக்கழக நூலகத்தின் ஆசியப் பிரிவில் பாதுகாக்கப்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக அறிஞர்களின் ஆய்வுக்காக மட்டுமே அவை பயன்படுத்தப்பட்டன.
இந்த செப்பேடுகளை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வர 2012ம் ஆண்டு முதல் பல்வேறு தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 2022ம் ஆண்டு, காலனித்துவ கால கலைப்பொருட்களை உரிய நாடுகளுக்கு திருப்பி வழங்கும் புதிய கொள்கையை நெதர்லாந்து அரசு அமல்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, யுனெஸ்கோ அமைப்பின் சர்வதேச குழு நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், இந்த செப்பேடுகளை இந்தியாவிற்கு திருப்பி வழங்க முடிவு செய்யப்பட்டது.
பிரதமர் மோடி மகிழ்ச்சி
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமைமிக்க தருணம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த செப்பேடுகள் உலகின் மிக அழகான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் பெரும்பாலும் எழுதப்பட்டுள்ளன. ராஜராஜ சோழன் வழங்கிய உறுதிமொழியை அவரது மகன் ராஜேந்திர சோழன் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த நிகழ்வை இவை எடுத்துக்காட்டுகின்றன” என்றும் கூறியுள்ளார்.
“சோழர்களின் பண்பாடு, கடல்சார் வல்லமை மற்றும் பாரம்பரியத்தை நினைத்து இந்தியர்கள் பெருமைப்படுகின்றனர்” என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்த செப்பேடுகளை பாதுகாத்து வந்த நெதர்லாந்து அரசு மற்றும் லைடன் பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
