இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக மியான்மர் மண்ணில் எந்தவொரு நடவடிக்கையும் நடைபெற அனுமதிக்க மாட்டோம் என மியான்மர் அதிபர் உ மின் ஆங் லைன், பிரதமர் நரேந்திர மோடியிடம் உறுதியளித்துள்ளார்.
மியான்மரில் கடந்த 2021ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து, அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழல் பெரும் கவனத்தை பெற்றது. பின்னர் நடைபெற்ற தேர்தல்களின் மூலம் உ மின் ஆங் லைன் அதிபராக பொறுப்பேற்றார். பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஐந்து நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அவர், நேற்று புதுடில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு மற்றும் எல்லை மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், வளர்ச்சி உதவி திட்டங்கள் மற்றும் பிராந்திய நிலவரம் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
இந்த சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், மியான்மரில் நிலையான அமைதி மற்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வு அவசியம் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தெரிவித்தார். ஆங் சான் சூச்சி தொடர்பான விவகாரமும் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றதாக கூறினார்.
வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, எரிசக்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மியான்மரின் இறையாண்மை மற்றும் தேசிய ஒற்றுமைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். அதேநேரத்தில், இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்ற கருத்தில் இரு தரப்பும் ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளன.
மியான்மர் மண்ணில் இருந்து இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான செயல்பாடுகள் நடைபெற அனுமதிக்க மாட்டோம் என அதிபர் உ மின் ஆங் லைன் வழங்கிய உறுதி, இருநாட்டு உறவுகளில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்த மியான்மர் அதிபர், பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மும்பை செல்ல உள்ள அவர், தொழில் மற்றும் வர்த்தக துறையினரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
