தெருவோர வியாபாரிகளுக்கான பி.எம். ஸ்வாநிதி குறுங்கடன் திட்டம், நாட்டின் கோடிக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமுடக்க நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ஆதரவாக, மத்திய அரசு கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பி.எம். ஸ்வாநிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் சாதனைகள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த திட்டம் வெறும் நிதியுதவி வழங்கும் திட்டம் மட்டுமல்ல என்றும், நம்பிக்கை மற்றும் கண்ணியத்துடன் ஏழை எளிய மக்களை முன்னேற்றும் முயற்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். நகர்ப்புற பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் தெருவோர வியாபாரிகளின் வாழ்க்கையை இந்த திட்டம் மாற்றியமைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வங்கிக் கடன் பெற முடியாமல் சிரமப்பட்ட கோடிக்கணக்கான தெருவோர வியாபாரிகளுக்கு, எந்தவித பிணையமும் இன்றி எளிதாக கடன் மற்றும் நிதிச் சேவைகள் கிடைக்க இந்த திட்டம் உதவியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைகளுக்கு வேகமாக மாறியுள்ளதாகவும், அது அவர்களின் வணிக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினசரி உழைப்பின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் தெருவோர வியாபாரிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும், தங்கள் தொழில்முனைவு மற்றும் அர்ப்பணிப்பால் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றி வரும் அனைத்து பயனாளிகளுக்கும் தனது வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
