இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்ததாகப் பரவிய வீடியோக்கள்: ராணுவம் விளக்கம்
புதுடெல்லி: இந்தியப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்துவிட்டதாகக் கூறி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரிது சவுத்ரி சமூக வலைதளத்தில் வெளியிட்ட இரண்டு வீடியோக்கள் தொடர்பாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. அந்த வீடியோக்களில் இடம்பெற்ற காட்சிகள் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது வீடியோவில் டீப் ஃபேக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி, இந்தியப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்துள்ளதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், இதனை மத்திய அரசும் ராணுவமும் மறுத்து வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரிது சவுத்ரி, இந்தியப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்துவிட்டதாகக் கூறி இரண்டு வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
நாதுலா வணிகப் பாதை குறித்த வீடியோ
முதல் வீடியோவில், சீன வாகனங்கள் இந்தியப் பகுதிக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்த இந்திய ராணுவம், அந்த வீடியோவில் சிக்கிமில் உள்ள நாதுலா கணவாய் வழியாகச் செல்லும் வாகனங்களே இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தது.
இந்தியா – சீனா எல்லையில் அமைந்துள்ள அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகப் பாதையில் வணிக வாகனங்கள் செல்வதை, சீன ராணுவத்தின் ஊடுருவல் எனத் தவறாகச் சித்தரிப்பதாக ராணுவம் விளக்கம் அளித்தது.
டீப் ஃபேக் வீடியோ என ராணுவம் விளக்கம்
இரண்டாவது வீடியோவில், ராணுவ அதிகாரி கிரிஷ் காலியா, அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்துவிட்டதாகக் கூறுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.
இந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்த ராணுவம், 2023 அக்டோபர் 27ஆம் தேதி ஜம்மு – காஷ்மீரின் குப்வாராவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எடுக்கப்பட்ட காட்சிகள் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் அந்த வீடியோ மாற்றப்பட்டதாகவும், அருணாச்சலப் பிரதேசத்தைச் சீனா ஆக்கிரமித்ததாகவோ அல்லது இந்திய ராணுவத்துக்கு அப்பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டதாகவோ அந்த அதிகாரி கூறவில்லை என்றும் ராணுவம் குறிப்பிட்டது.
காங்கிரஸ் மீது கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்ட அறிக்கையில், இந்திய ராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி நடைபெறுவதாகக் குற்றம்சாட்டினார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களை காங்கிரஸ் பரப்புவதாகக் கூறிய அவர், இதற்காக அக்கட்சி மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், இந்தச் செயலைத் துரோகத்துக்கு இணையானதாகக் குறிப்பிட்டு காங்கிரஸை விமர்சித்தார்.
