வாஷிங்டன்: இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய கப்பல்களை அமெரிக்க படை தாக்கியதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.
ஹார்முஸ் கடல் பரப்பை கடந்து சென்ற இந்திய கப்பல்கள் மீது கடந்த சில நாட்களாக தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் மூவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு அமெரிக்க படை தான் காரணம் என செய்திகள் பரவிய நிலையில், மத்திய அரசு அமெரிக்க தூதரக அதிகாரியை அழைத்து தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது.
இந்த சூழலில், இந்திய கப்பல்களை தாக்கியது ஈரான் தான் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ஈரான் தரப்பில் இருந்து ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்கள் பொய்யானவை என்றும், அவற்றுக்கும் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒப்பந்தம் குறித்து ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கைகளுக்கும், அவர்கள் கூறிய பிற கருத்துகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்த அவர், அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்வது கண்ணியமற்ற செயல் என்றும், நல்லெண்ணத்தின் அடிப்படையில் செயல்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இருந்து இந்திய கப்பல்கள் வெளியேறிக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்டதாக கூறப்படும் டிரோன் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், ஈரான் உடனடியாக தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
