புதுடில்லி: உணவுப் பொருட்களில் சுகாதார குறைபாடுகள் மற்றும் பூச்சிகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, பிரபல உணவு மற்றும் விற்பனை நிறுவனங்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஏலூரில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் கே.எப்.சி. உணவகத்தில் சுகாதார குறைபாடுகள் இருப்பதாகவும், அங்கு வழங்கப்படும் உணவுகள் தரமான முறையில் தயாரிக்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
அதேபோல், நெஸ்லே இந்தியாவின் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டில் புழுக்கள் இருந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகின. மேலும், பிளிப்கார்ட் மினிட்ஸ் மூலம் விநியோகிக்கப்பட்ட ஓபன் சீக்ரெட் நிறுவனத்தின் பேரிச்சம் பழ பாக்கெட்டுகளில் பூச்சிகள் இருந்ததாகவும் நுகர்வோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த தொடர் புகார்களைத் தொடர்ந்து, கே.எப்.சி., நெஸ்லே இந்தியா, பிளிப்கார்ட் மினிட்ஸ் மற்றும் ஓபன் சீக்ரெட் நிறுவனங்களுக்கு FSSAI விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீசில், புகாருக்கு உள்ளான தயாரிப்புகளின் விற்பனையாளர் விவரங்கள், சம்பந்தப்பட்ட தயாரிப்புகளின் பேட்ச் தரப் பரிசோதனை பதிவுகள் மற்றும் பாதிக்கப்பட்ட பொருட்களை சந்தை மற்றும் விநியோக சங்கிலியில் இருந்து அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பாக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆதாரப்பூர்வமான புகார்களின் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
