ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் அத்துமீறல்களை மறைக்கும் நோக்கில் பாகிஸ்தான் பொய்யான தகவல்கள் மற்றும் போலி செய்திகளை பரப்பி வருவதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வணிகர் ஒருவர் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது உடலை பெற்றுக்கொள்ள மறுத்த பொதுமக்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தை கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் 30 பேர் உயிரிழந்ததுடன் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால், பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் போலி செய்திகள் மற்றும் வீடியோக்களை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், தனது உள்நாட்டு தோல்விகளையும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளையும் மறைப்பதற்காக பாகிஸ்தான் தவறான தகவல்களை பரப்பி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீசாரின் அடக்குமுறையால் பலர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்று குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானின் செயல்பாடுகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச சமூகம் உரிய பொறுப்பை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
