சமூக ஊடகங்களில் பகிரப்படும் சட்டவிரோதமான அல்லது நீதித்துறையின் சுதந்திரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அவதூறு உள்ளடக்கங்களை கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது என்றும், அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டில்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
டில்லியின் சாக்கேத் பகுதியில் கடந்த மாதம் கட்டடம் இடிந்து விழுந்து ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, டாக்டர் கபில் காக்கர் என்பவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததுடன், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, டில்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் நீனா பன்சால் கிருஷ்ணா மற்றும் மது ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சமூக ஊடகங்களில் சட்டவிரோதமான தகவல்கள் அல்லது அவதூறு பதிவுகள் வெளியாகும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அவற்றை உடனடியாகவும் விரைவாகவும் நீக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
மேலும், “சமூக வலைதளங்களில் அவதூறான மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறான விவகாரங்களில் சமூக ஊடக நிறுவனங்கள் வெறும் பார்வையாளர்களாக இருக்கக் கூடாது. நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்காமல் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதேநேரத்தில், நீதிமன்ற உத்தரவுகள், தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை நியாயமான முறையில் விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் இருப்பதாகவும், ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல் நீதிபதிகள் மீது ஊழல் அல்லது குற்றப் பின்னணி போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நியாயமான விமர்சனமாக கருதப்பட முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த வழக்கில், கபில் காக்கரின் சமூக ஊடக கணக்குகளை முடக்கவும், அவர் வெளியிட்டதாக கூறப்படும் அவதூறு பதிவுகளை முழுமையாக நீக்கவும் YouTube, X, Meta மற்றும் LinkedIn நிறுவனங்களுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
