அழகு சிகிச்சை ஊசிகளை பயன்படுத்த அழகு மையங்களுக்கு தடை
புதுடில்லி: அழகு சிகிச்சைக்காக ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்துகள், “அழகு சாதன பொருட்கள்” என்ற வரையறைக்குள் வராது என்றும், அவற்றை அழகு கலை மையங்கள் அல்லது தனிநபர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் மத்திய Central Drugs Standard Control Organisation தெளிவுபடுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பல அழகு கலை மையங்கள் மற்றும் கிளினிக்குகளில், ஊசி மூலம் செலுத்தப்படும் அழகு சிகிச்சைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சமூக வலைதள விளம்பரங்கள் மூலம் இத்தகைய சிகிச்சைகள் பெரிதும் பிரபலப்படுத்தப்படுகின்றன.
இந்த சூழலில், நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யவும், தவறான விளம்பரங்கள் மற்றும் அங்கீகாரமற்ற சிகிச்சை முறைகளை கட்டுப்படுத்தவும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
அந்த உத்தரவின் படி, உடலை அழகுபடுத்த, சுத்தப்படுத்த, கவர்ச்சியை மேம்படுத்த அல்லது தோற்றத்தை மாற்ற பயன்படுத்தப்படும் பொருட்கள் உடலின் மேற்பரப்பில் தேய்க்க, ஊற்ற, தெளிக்க அல்லது பயன்படுத்தப்படுபவையாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ஊசி மூலம் செலுத்தப்படும் தயாரிப்புகள் அழகு சாதன பொருட்களின் வரம்புக்குள் வராது என்றும், அவற்றை அழகு சாதன சிகிச்சை என்ற பெயரில் பயன்படுத்த அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறி செயல்படும் அழகு மையங்கள் மற்றும் தனிநபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய விதிமீறல்கள் அல்லது தவறான நடைமுறைகள் குறித்து பொதுமக்கள் மின்னஞ்சல் மூலமாக மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிற்கோ அல்லது மாநில மருந்து உரிமம் வழங்கும் அதிகாரிகளிடமோ புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
