டில்லி: பா.ஜ. தொழில்நுட்பப் பிரிவின் தேசியத் தலைவர் அமித் மாள்வியா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
துணை முதல்வர் உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது தொடர்பாக சமூக வலைதளத்தில் அமித் மாள்வியா கருத்து பதிவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து, திருச்சி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தினகரன் புகார் அளித்ததையடுத்து போலீசார் அமித் மாள்வியா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அமித் மாள்வியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, தமிழக போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
அந்த தீர்ப்பில், “ஒழிப்பு” என்ற வார்த்தை குறிப்பிட்ட மக்கள் குழுவே இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கும். அது மறைமுகமாக இனப்படுகொலை அல்லது கலாச்சார அழிவை குறிக்கிறது. எனவே துணை முதல்வரின் பேச்சை கேள்விக்குள்ளாக்கி அமித் மாள்வியா பதிவிட்ட கருத்து வெறுப்புப் பேச்சாக கருத முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
மேலும், அது துணை முதல்வரின் பேச்சுக்கு அளிக்கப்பட்ட எதிர்வினை மட்டுமே என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
அதே நேரத்தில், காவல்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் அரசியல் சார்பு இருப்பதாகவும், அதிகாரிகள் அரசியல் சார்பின்றி செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அந்த மனுவில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், “சனாதன ஒழிப்பு” என்பது சமூக நீதி மற்றும் சமத்துவத்தை குறிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
