அமெரிக்காவின் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் AH-64 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியானது. ஈரானுடனான மோதல் தொடங்கிய பின்னர் அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட முதல் சம்பவம் இதுவாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று இரவு ஹார்முஸ் ஜலசந்தி அருகே ரோந்துப் பணியில் இருந்த நமது அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களில் ஒன்று ஈரானியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, டிரம்பின் உத்தரவின் பேரில் அமெரிக்கப் படைகள் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கப் படை மத்திய தலைமையகம் அறிவித்துள்ளது.
சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, அதிபர் டிரம்பின் வழிகாட்டுதலின் பேரில் ஈரானுக்கு எதிராக தற்காப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஈரானின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு இது தகுந்த பதிலடியாக அமையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
