சென்னை: சமூக வலைதளங்களில் ஒருவரின் அனுமதியின்றி அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக பயன்படுத்தி வாக்காளர்களை திசைதிருப்பும் பதிவுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், மின்னணு மற்றும் சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிட அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மாநில அல்லது மாவட்ட அளவிலான ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடமிருந்து முன் அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக குறைந்தது மூன்று நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட வீடியோக்களில், அவை AI மூலம் உருவாக்கப்பட்டவை அல்லது மாற்றப்பட்டவை என்பதை தெளிவாக குறிப்பிடும் லேபிள்கள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
ஒருவரின் அனுமதியின்றி அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் மற்றும் வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் உள்ளடக்கங்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளின் சமூக வலைதள பக்கங்களில் இத்தகைய பதிவுகள் கண்டறியப்பட்டால், மூன்று மணி நேரத்திற்குள் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான ஆண்டு ஊதியம் ரூ.6,000 இலிருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக எஸ்.ஐ.ஆர் பணிக்காக ரூ.2,000 சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
மேலும், உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டுவசதி சங்க வளாகங்களில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் 5, திருவள்ளூரில் 4, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் தலா 2, மதுரையில் 1 என மொத்தம் 14 இடங்களில் புதிய ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
