கோவை: தமிழக அரசின் அனுமதிக்கு மாறாக காந்திபுரம் சந்திப்பில் விநாயகர் கோயிலுக்கு எதிரே நிறுவப்பட்டுள்ள ஈ.வெ.ரா. சிலையை, ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட இடத்துக்கு மாற்றுவதில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
கோவை காந்திபுரம் சந்திப்பில் உள்ள சாலைத்தீவு திடலில் லட்சுமி மில்ஸ் நிர்வாகம் சார்பில் ராஜாஜி சிலை நிறுவப்பட்டிருந்தது.
சத்தி ரோட்டில் இருந்து பாரதியார் ரோட்டுக்கு திரும்பும் இடத்தில் ஈ.வெ.ரா. சிலை இருந்தது.
2015ஆம் ஆண்டு நஞ்சப்பா ரோட்டில் மேம்பாலம் கட்டியபோது இந்த இரண்டு சிலைகளும் அகற்றப்பட்டன.
சில மாதங்களுக்கு முன் மாநகராட்சி அந்த இடத்தில் சாலைத்தீவு திடலை உருவாக்கியது.
ஈ.வெ.ரா. சிலை இருந்த இடத்தில் தனியார் நிறுவனம் சந்திராயன் ராக்கெட் மாதிரியை நிறுவியது.
இதனை தொடர்ந்து தி.க. அமைப்பினர் ராஜாஜி சிலை இருந்த சாலைத்தீவு திடலில் விநாயகர் கோயிலுக்கு எதிரே உள்ள இடத்தில் ஈ.வெ.ரா. சிலையை நிறுவியதாக கூறப்படுகிறது.
இந்த சிலை நிறுவுவதற்கு நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையில் தற்போது அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மாறாக 2016ஆம் ஆண்டு மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானம் மற்றும் 1998ஆம் ஆண்டு தமிழக அரசு வழங்கிய அனுமதி ஆகியவை ஆதாரமாக காட்டப்பட்டுள்ளன.
தமிழக அரசு வழங்கிய அனுமதியின் படி சத்தி ரோட்டில் இருந்து பாரதியார் ரோட்டுக்கு திரும்பும் மூலையில் சிலை நிறுவ அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது பாரதியார் ரோட்டில் இருந்து நஞ்சப்பா ரோட்டுக்கு திரும்பும் இடத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வேறு இடத்தில் சிலை நிறுவ வேண்டுமானால் அரசு துறைகளின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி புதிய அனுமதி பெற வேண்டும்.
அவ்வாறு அனுமதி பெறாமல் பழைய தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜாஜி சிலை இருந்த இடத்தில் ஈ.வெ.ரா. சிலை நிறுவப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையிடம் மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது.
மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து பழைய ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
அதில் தமிழக அரசின் அனுமதிக்கு மாறாக சிலை நிறுவப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து காந்திபுரம் சந்திப்பில் ஈ.வெ.ரா. சிலை நிறுவ தற்போது அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அனுமதியின்றி நிறுவப்பட்ட சிலையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு மாநகராட்சி கமிஷனர், மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனருக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
ஆனால் சட்டசபை தேர்தல் சூழ்நிலை காரணமாக அரசியல் அழுத்தம் வரலாம் என்ற காரணத்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.
அனுமதி இல்லாமல் சிலை நிறுவியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கே மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
