சென்னை: “அதிமுக தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு புதிய அதிமுகவாக பார்க்கின்றனர்” என்று அமைச்சர் ஆதவ் தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2026 சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. குறிப்பாக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த பிறகும், ஏன் மக்கள் நிராகரித்தார்கள் என்பதை புரிந்து கொள்ளாமல், இன்ஸ்டாகிராம் காரணம் என்று போலியான பிரசாரங்களை செய்து வருகின்றனர்” என்றார்.
மேலும், “தேர்தல் காலத்தில் திமுக பல பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்தது. ஆனால் மக்கள் அவற்றை முழுமையாக நிராகரித்தனர்” என்றும் கூறினார்.
“இபிஎஸ்க்கு ஓட்டு போட்டால் அது பாஜகவுக்கு போட்ட ஓட்டு போன்றது என்று ஸ்டாலின் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு பிந்தைய அரசியல் சூழல் குறித்து பேசுகையில், “திமுக, அதிமுக மற்றும் பாஜக இணைந்து இபிஎஸை முதல்வராக்க முயற்சி செய்தன. அதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது” என்று ஆதவ் குற்றம்சாட்டினார்.
“மக்கள் தீர்ப்புக்கு எதிரான ஒரு ஆட்சியை உருவாக்க முயற்சி நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை என்றால் திமுக, அதிமுக, பாஜக இணைந்து ஆட்சியமைக்கும் நிலை உருவாகும் என்று கம்யூனிஸ்ட் தலைவர் பேபி தெரிவித்திருந்தார்” என்றும் கூறினார்.
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“ஆனால் திமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் எங்களை தொடர்பு கொண்டு, இப்படிப்பட்ட கூட்டணி அமைந்தால் சரியாக இருக்குமா என்று கேள்வி எழுப்பின” என்று ஆதவ் கூறினார்.
மேலும், “சந்தர்ப்பவாத அரசியலை திட்டமிட்டு முன்னெடுத்தது திமுக. அதை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்தன. கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்த்ததால் இபிஎஸை முதல்வராக்கும் முயற்சி கைவிடப்பட்டது” என்றார்.
அதிமுகவில் இருந்து விலகி வந்த எம்.எல்.ஏக்கள் குறித்து பேசுகையில், “தவெகவை ஒரு புதிய அதிமுகவாக அதிமுக தொண்டர்கள் பார்க்கின்றனர். அதனால் மக்கள் சேவை செய்யும் நோக்கில் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்” என்றார்.
“மூன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததை ஸ்டாலின் ‘குதிரை பேரம்’ என்று கூறுகிறார். ஆனால் ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தபோது அது குதிரை பேரம் இல்லையா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், “அதிமுக தொண்டர்களை நாங்கள் வரவேற்கிறோம். முன்னாள் எம்.பிக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்” என்றும் தெரிவித்தார்.
“ஒவ்வொரு எம்.எல்.ஏக்கும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய அரசியல் மற்றும் சட்ட ரீதியான அதிகாரம் உள்ளது. மக்கள் முன்னிலையில் நேர்மையாக ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் எங்களை சந்தித்தனர்” என்றார்.
முதல்வர் விஜயை சந்தித்தது குறித்து பேசுகையில், “மரியாதை நிமித்தமாகவே அவர்கள் முதல்வரை சந்தித்தனர். இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்று அமைச்சர் ஆதவ் நம்பிக்கை தெரிவித்தார்.
