சென்னை: பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நகரின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், பல டாஸ்மாக் கடைகள் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள்ளாக இயங்கி வருவது கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற இடங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்காக பொதுமக்கள் நேரடியாகவோ அல்லது ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் மூலமாகவோ மாவட்ட ஆட்சியர்களிடம் மனுக்கள் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், “மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம்; தமிழகத்தைக் காப்போம். மாறுவோம், மாற்றுவோம்” என்று அண்ணாமலை தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
