வெற்றிப் பயணம் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்
தமிழகத்தில் மகளிருக்கான விரிவுபடுத்தப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டமான ‘வெற்றிப் பயணம்’ இன்று (அக். 2) தொடங்கப்பட்டது.
சென்னை கோயம்பேட்டில் மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய், பின்னர் அரசு பேருந்துகளில் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் வழங்கிய விஜய்
தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் அரசு பேருந்தில் முதல்வர் விஜய் பயணம் செய்தார்.
அப்போது பேருந்தில் இருந்த பெண் பயணிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டுகளை வழங்கி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
12,692 பேருந்துகளில் இலவச பயணம்
‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் மூலம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயண வசதி மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகள், புறநகர் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.க்கு மேல் இயக்கப்படும் மலைப்பகுதி சாதாரண பேருந்துகளும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன்படி மொத்தம் 12,692 அரசு பேருந்துகள் வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
தினமும் 84.32 லட்சம் பெண்கள் பயன்
தமிழகத்தின் 7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில், 12,692 பேருந்துகள் இத்திட்டத்தின் கீழ் இயக்கப்படுகின்றன.
இதன்மூலம் தினமும் சுமார் 84.32 லட்சம் பெண் பயணிகள் பயனடைவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாணவிகள், பணிபுரியும் பெண்களுக்கு பயன்
இந்த விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், பெண்கள் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லவும் கட்டணமின்றி அரசு பேருந்துகளைப் பயன்படுத்த முடியும்.
மேலும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக பயணம் செய்யும் பெண்களுக்கும் இந்தத் திட்டம் பயன்படும் என அரசு தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் பொதுப் போக்குவரத்து வசதி
வெற்றிப் பயணம் திட்டத்தின் மூலம் தமிழக மகளிருக்கு எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி அதிகரிக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
திட்டத்தின் கீழ் மொத்த பேருந்துகளில் சுமார் 69 சதவீதமும், தினசரி பேருந்து நடைகளில் 85 சதவீதமும் இடம்பெறுகின்றன.
