அமெரிக்க கடற்படையைப் பாராட்டி இந்திய போர்க்கப்பல் படங்களைப் பகிர்ந்த அரசியல்வாதிகள்!
வாஷிங்டன்: அமெரிக்க கடற்படையின் 251வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அந்நாட்டின் அரசியல்வாதிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தபோது இந்திய போர்க்கப்பல்களின் படங்களைப் பகிர்ந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க கடற்படை 1775ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் ஆண்டு விழாவை முன்னிட்டு, கடந்த அக்டோபர் 13ஆம் தேதி பல்வேறு அரசியல்வாதிகள் கடற்படையைப் பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர். குறிப்பாக, அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் போர்க்கப்பல்களின் படங்களைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ஆனால், அவர்கள் வெளியிட்ட படங்கள் அமெரிக்க கடற்படைக் கப்பல்களுடையவை அல்ல என்று ஓர் அமெரிக்கப் பத்திரிகையாளர் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பேசுபொருளானது.
படங்களை ஆய்வு செய்தபோது, அவை இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கோதாவரி, ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா மற்றும் ஐஎன்எஸ் பியாஸ் ஆகிய போர்க்கப்பல்களைக் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற கடற்படைப் பயிற்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே இவை என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்க கடற்படையின் ஆண்டு விழாவுக்காக இந்தியப் போர்க்கப்பல்களின் படங்கள் பகிரப்பட்ட விவகாரம் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, பலரும் இதுகுறித்து நகைச்சுவையாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
