சென்னை: பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் முழுமையாக மூடப்படவில்லை என்று குற்றம்சாட்டி, அவற்றின் பட்டியல் மற்றும் ஆதாரங்களை ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்ற பிறகு, பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் இயங்கி வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டதாகவும், அந்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுவிட்டதாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் விக்னேஷ் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை நகரின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில், 500 மீட்டர் வரம்பிற்குள் பல டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்று விதிமுறைகளை மீறி இயங்கும் டாஸ்மாக் கடைகள் குறித்து பொதுமக்கள் நேரடியாகவோ அல்லது ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
“மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம்” என்ற கோஷத்துடன், சட்ட விதிமுறைகளுக்கு முரணாக செயல்படும் மதுக்கடைகளை மூட பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
