ஆக்லாந்து: இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளின் உறவில் வரலாற்று மைல்கல்லாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அரசுமுறை பயணத்தின் போது, பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, இரு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஆக்லாந்து அரசாங்க மாளிகையில் பிரதமர் மோடிக்கு பாரம்பரிய மாவோரி ‘போவிரி’ சடங்கின் மூலம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்த அவர், நியூசிலாந்தின் வளமான பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்த வரவேற்பு தனக்கு பெருமையளிப்பதாகக் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “இந்தியா–நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும். உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்காக இந்தியாவும் நியூசிலாந்தும் இணைந்து செயல்படும்” என்றார்.
மேலும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்திய பிரதமர் நியூசிலாந்துக்கு வருகை தருவது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்றும், நியூசிலாந்து மக்களின் அன்பும், இந்தியாவின் மீது அவர்கள் கொண்டுள்ள பாசமும் தன்னை நெகிழ்ச்சியடையச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பயணம் இந்தியா–நியூசிலாந்து உறவை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையையும் பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்.
