தமிழக கோயில் நிலங்கள் எவ்வளவு? மாவட்ட வாரியாக அறிக்கை கேட்கும் உயர்நீதிமன்றம்
மதுரை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் எண்ணிக்கை, அவற்றுக்குச் சொந்தமான நிலங்களின் பரப்பளவு, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் மற்றும் அவற்றை மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் சொந்தமான கட்டளை நிலம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருப்பதாகவும், அந்த நிலத்தின் பட்டா சட்டவிரோதமாகத் தனிநபர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், அந்தச் சொத்தை தற்போது அனுபவித்து வருபவர்கள் மற்றும் முன்பு அனுபவித்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி, அரசியல் பின்னணி உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இதேபோன்ற நிலை தமிழகத்தின் பல கோயில்களுக்குச் சொந்தமான கட்டளைச் சொத்துகளிலும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கோயில் சொத்துகளைப் பாதுகாத்து மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, மாநிலம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான கட்டளைச் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதிகள் பி. வேல்முருகன், ஆர். பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து, அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் எண்ணிக்கை, அவற்றுக்குச் சொந்தமான நிலங்களின் மொத்தப் பரப்பளவு, கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள், குத்தகைதாரர்களின் அனுபவத்தில் உள்ள நிலங்கள், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் மற்றும் அவற்றை மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அளிக்க நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும், கோயில் நிலங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையையும் மாவட்ட வாரியாகத் தொகுத்து அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் குழு அமைத்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகள் குறித்து உத்தரவிடப்படும் எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை நவம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
