பயங்கரவாத முயற்சியை முறியடித்த பயணிகள்
துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற Flydubai விமானத்தில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில், இந்திய விமானி கேப்டன் சுமித் மச்சார், இஸ்ரேலிய பயணிகள் மற்றும் UAE விமானக் குழுவினர் இணைந்து விமானத்தை பாதுகாத்ததாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
FZ1073 விமானத்தில் துணை விமானி கேப்டன் சுமித் மச்சாரை தாக்கியதைத் தொடர்ந்து விமானம் திடீரென உயரம் இழந்தது. காயமடைந்த நிலையிலும் சுமித் மச்சார் காக்பிட் கதவைத் திறந்ததால், பயணிகள் மற்றும் குழுவினர் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியவரை கட்டுப்படுத்த முடிந்தது. பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக்கில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இஸ்ரேலிய பயணிகள் துணிச்சல்
தாக்குதலுக்குப் பிறகு விமானத்தில் இருந்த இஸ்ரேலிய பயணிகள் விரைந்து செயல்பட்டு தாக்குதல் நடத்திய துணை விமானியை கட்டுப்படுத்த உதவியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் துணிச்சலுடன் செயல்பட்ட நான்கு இஸ்ரேலிய பயணிகளுக்கு “President’s Medal for Civil Heroism” வழங்க பரிந்துரைக்க உள்ளதாக இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார்.
சுமித் மச்சாரின் முக்கிய பங்கு
துணை விமானியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையிலும், சுமித் மச்சார் காக்பிட் கதவைத் திறக்க முடிந்ததே அடுத்தகட்ட நடவடிக்கைக்கு முக்கியமானதாக அமைந்தது.
இதன் மூலம் பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் காக்பிட்டுக்குள் சென்று தாக்குதல் நடத்தியவரை கட்டுப்படுத்தினர். விமானத்தில் இருந்த இரண்டு மாற்று விமானிகளும் பின்னர் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க உதவினர்.
“இந்தியர்கள், இஸ்ரேலியர்கள், அமீரகவாசிகள் ஒன்றிணைந்தனர்”
இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலியர்கள், அமீரகவாசிகள் மற்றும் இந்திய விமானி ஆகியோர் பயங்கரவாத முயற்சிக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய விமானி சுமித் மச்சார், இஸ்ரேலிய பயணிகள் மற்றும் UAE விமானக் குழுவினரின் துணிச்சல் ஒரு பெரிய பேரழிவு ஏற்படுவதைத் தடுத்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து விசாரணை
செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹம்மாம் அல்-ஹம்மாமி, விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விபத்துக்குள்ளாக்க முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் 3ஆம் தேதி UAE அதிகாரிகளும் இந்த சம்பவத்தை பயங்கரவாத முயற்சி என குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தின் பின்னணி மற்றும் நோக்கம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
