புதுடில்லி: சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்களின் தாக்கத்தால் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லக்கூடும் என்பதால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தை டில்லி விஞ்ஞான் பவனில் பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ராம்நாத் கோவிந்தின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிடுவதில் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.
ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை இந்திய ஜனநாயகத்தின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் முக்கிய ஆவணமாக இருக்கும் என்றும், வரும் தலைமுறையினர் அதிலிருந்து பல பாடங்களை கற்றுக்கொள்ள முடியும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த அவர், இது “ரீல்ஸ் காலம்” என்பதால் சமூக ஊடக பிரபலங்கள் அவர்களை வேறு திசையில் ஈர்க்கக்கூடும் என்று எச்சரித்தார்.
வாழ்க்கையில் எளிதான குறுக்கு வழிகளைத் தேடுவதைவிட, தங்களுக்கு பிடித்த தலைவர்கள் மற்றும் சாதனையாளர்களின் சுயசரிதைகளை படிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், சுயசரிதைகளை படிப்பதன் மூலம் மற்றவர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களில் இருந்து இளைஞர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ராம்நாத் கோவிந்தின் பங்களிப்பு
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ராம்நாத் கோவிந்த் தொடர்ந்து நாட்டின் பொது வாழ்க்கையில் பங்களித்து வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான பணிகளிலும் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக மோடி தெரிவித்தார்.
ராம்நாத் கோவிந்தின் சுயசரிதையை இளைஞர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவரைப் போன்ற பல இளைஞர்கள் நாட்டுக்கு தேவை என்றும் பிரதமர் மோடி கூறினார்.
சூழ்நிலைகளால் துவண்டு போகாமல், ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் மன உறுதியை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
