புதுடில்லி: வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்தும் எப்சிஆர்ஏ சட்ட திருத்த மசோதா, விரிவான ஆய்வுக்காக பார்லிமென்ட் கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும் நன்கொடைகளின் மூலம், அதன் நோக்கம் மற்றும் இந்தியாவில் எந்த காரணத்திற்காக அந்த நிதி பயன்படுத்தப்படுகிறது என்பன உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக அறிந்து கொள்ளும் வகையில் எப்சிஆர்ஏ சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது சிறுபான்மையினருக்கு எதிரானதாக இருப்பதாகவும், மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில், மசோதாவின் அம்சங்களை விரிவாக ஆய்வு செய்வதற்காக அதை பார்லிமென்ட் கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி அமைக்கப்பட உள்ள பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் லோக்சபாவைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் மற்றும் ராஜ்யசபாவைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் இடம்பெற உள்ளனர்.
இதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் கொண்டு வந்தார்.
