புதுடில்லி: டில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு மத்திய கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.
ஆனால், கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் டில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இருவரும் கலந்து கொள்ளவில்லை.
கார்கே வராதது குறித்து கேள்வி
வயது காரணமாக மல்லிகார்ஜுன கார்கேவால் நீண்ட தூரம் நடக்கவோ, படிக்கட்டுகளில் ஏறவோ முடியாது என காங்கிரஸ் தரப்பில் காரணம் கூறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கார்கே வழக்கமாக பார்லிமென்ட் வளாகத்தில் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வருவதாகவும், சுதந்திர தின விழாவுக்கு மட்டும் அவரால் பங்கேற்க முடியாதா என்றும் பாஜக தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இருக்கை விவகாரம்
கடந்த 2024ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் ராகுல் காந்திக்கு இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதாகவும், இதை அவமதிப்பாக கருதியே அவர் விழாவை புறக்கணித்ததாகவும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆண்டில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்களுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதாகவும், அதனாலேயே ராகுல் காந்திக்கு இரண்டாவது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது.
எனினும், இந்த விளக்கத்தை காங்கிரஸ் தரப்பினர் ஏற்கவில்லை என்றும், தங்களை அவமதித்ததாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரமே அடுத்தடுத்த ஆண்டுகளிலும் சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்காததற்கு காரணமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
