அயோத்தி ராமர் கோவில் நன்கொடை நிதி முறைகேடு தொடர்பான வழக்கில், விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணைக் குழு (SIT) தனது விசாரணையின் தற்போதைய நிலை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில், வழக்கறிஞர்கள் அஜய் குமார் ராய், தினேஷ் குமார் யாதவ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. சுதாகர் சிங் ஆகியோர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
மனுவில், உத்தரப் பிரதேச அரசு அமைத்துள்ள எஸ்.ஐ.டி.க்கு சிக்கலான நிதி முறைகேடுகளை விசாரிக்கும் தொழில்நுட்ப மற்றும் தடயவியல் வசதிகள் போதுமானதாக இல்லை என்றும், எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யாமல் விசாரணை தொடங்கப்பட்டதால் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மேலும், கோவில் உண்டியல் மற்றும் நன்கொடை தொடர்பான கணக்குப் பதிவுகள், யுபிஐ பரிவர்த்தனை விவரங்கள், சிசிடிவி காட்சிகள், மின்னஞ்சல்கள் மற்றும் சர்வர் தரவுகள் உள்ளிட்ட அனைத்து மின்னணு ஆதாரங்களையும் பாதுகாக்க இடைக்கால உத்தரவு வழங்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, எஸ்.ஐ.டி. தனது விசாரணை முன்னேற்றம் மற்றும் குழு உறுப்பினர்களின் விவரங்களுடன் கூடிய அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
மேலும், சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு, உத்தரப் பிரதேச அரசு மற்றும் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
