“மோடியை நாங்கள் எதிர்க்கலாம்; அமெரிக்கர் இந்தியாவுக்கு உத்தரவிட முடியாது” – ஒவைசி
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியைத் தாங்கள் அரசியல் ரீதியாக எதிர்க்கலாம் என்றாலும், இந்தியாவின் முடிவெடுக்கும் அதிகாரத்தை வெளிநாட்டுத் தொழிலதிபர்கள் கேள்விக்குள்ளாக்குவதை ஏற்க முடியாது என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முகேஷ் அம்பானியை “இந்தியாவின் நிஜ பாஸ்” எனக் குறிப்பிட்டு எலான் மஸ்க் வெளியிட்ட கருத்தைக் கடுமையாக விமர்சித்தார்.
எலான் மஸ்க் கருத்துக்கு எதிர்ப்பு
பிரதமர் மோடியைத் தாங்கள் எதிர்ப்பதாகக் குறிப்பிட்ட ஒவைசி, அதற்காக ஒரு வெளிநாட்டவர் இந்தியப் பிரதமர் குறித்து இத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பதை ஏற்க முடியாது என்றார். நாட்டின் வளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்தியாவே தீர்மானிக்கும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு உத்தரவிடுவது போன்ற அணுகுமுறையை ஏற்க முடியாது எனக் கூறிய அவர், இந்தியாவின் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஒரு வெளிநாட்டுத் தொழிலதிபர் சவாலுக்கு உட்படுத்தும்போது, தேசியவாதத்தை வலியுறுத்தும் பாஜகவும் மத்திய அரசும் ஏன் மௌனமாக இருக்கின்றன என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்தியர்களின் நலனுக்கு முன்னுரிமை
இந்திய ஊழியர்கள் மற்றும் குடிமக்களின் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஒவைசி தெரிவித்தார். வெளிநாட்டவர்களின் நலனுக்காக இந்தியர்களின் நலன்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும் கூறினார்.
உள்நாட்டில் அரசை விமர்சிப்பதற்கும், வெளிநாட்டுத் தொழிலதிபர் ஒருவர் இந்தியாவுக்கு நிபந்தனைகளை விதிக்க அனுமதிப்பதற்கும் இடையே பெரிய வேறுபாடு இருப்பதாகவும் ஒவைசி குறிப்பிட்டார்.
