உலகக்கோப்பை கால்பந்து தொடரின் சுற்று 16 ஆட்டத்தில் நார்வே அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த பிரேசில் அணி தொடரிலிருந்து வெளியேறியது. இந்த தோல்வியைத் தொடர்ந்து, பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
போட்டியின் இறுதிக்கட்டத்தில் பிரேசிலுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை நெய்மர் கோலாக மாற்றியிருந்தாலும், எர்லிங் ஹாலாண்ட் அடித்த இரண்டு கோல்களின் உதவியால் நார்வே வெற்றியை கைப்பற்றியது. போட்டி முடிந்ததும் மைதானத்திலேயே நெய்மர் கண்ணீர் மல்க அமர்ந்திருந்த காட்சி ரசிகர்களை உருக்கமாக்கியது.
1990-ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகக்கோப்பை தொடரில் இவ்வளவு விரைவாக பிரேசில் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும். வலது கெண்டைக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த உலகக்கோப்பையில் பிரேசில் விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு ஆட்டங்களில் மட்டுமே நெய்மர் களமிறங்கினார். ஸ்காட்லாந்துக்கு எதிராக 15 நிமிடங்களும், நார்வேக்கு எதிராக மாற்று வீரராக 67-வது நிமிடத்தில் களமிறங்கியும் விளையாடினார்.
தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நெய்மர், “நான் இறுதி வரை போராடினேன். இப்போது என் சர்வதேச பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. நான் தொடங்கிய இடத்திலேயே என் பயணத்தை நிறைவு செய்கிறேன்” என்று உணர்ச்சியுடன் தெரிவித்தார்.
2010 ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவுக்கு எதிரான நட்பு ஆட்டத்தில் பிரேசில் அணிக்காக அறிமுகமான நெய்மர், தனது முதல் சர்வதேச கோலையும் அதே மெட்லைப் ஸ்டேடியத்தில் பதிவு செய்திருந்தார். தற்போது அதே மைதானத்தில் தனது கடைசி சர்வதேச கோலையும் அடித்து ரசிகர்களிடம் விடைபெற்றுள்ளார்.
34 வயதான நெய்மர், பிரேசில் அணிக்காக 130 சர்வதேச போட்டிகளில் விளையாடி 80 கோல்கள் அடித்துள்ளார். இதன் மூலம் பீலேவின் 77 கோல்கள் சாதனையை முறியடித்து, பிரேசிலின் அதிக கோல்கள் அடித்த வீரராக திகழ்கிறார். மேலும், நான்கு உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த இரண்டாவது பிரேசில் வீரர் என்ற பெருமையையும் பீலேவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
