திருவட்டாறு: கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளையைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனரின் மகள் சஞ்சனா, நீட் தேர்வில் 547 மதிப்பெண்கள் பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க தேர்வானதை பாராட்டி BMS சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
ஓட்டுனரின் மகள் சஞ்சனா
மணக்காவிளை பகுதியைச் சேர்ந்த நாகராஜன், திருவட்டாறு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சஞ்சனா, குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்தார்.
தொடர்ந்து நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்று தேர்வு எழுதிய சஞ்சனா, 547 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதன் மூலம் ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளார்.
BMS சார்பில் பாராட்டு விழா
மாணவி சஞ்சனாவின் வெற்றியை பாராட்டும் வகையில் பாரதிய அரசு போக்குவரத்து தொழில் சங்க பேரவை (BMS) சார்பில் திருவட்டாறு BMS அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
மாநில பொதுச்செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கன்னியாகுமரி மாவட்ட BMS நிர்வாகிகள் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்டெதஸ்கோப் பரிசு
விழாவில் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ள மாணவி சஞ்சனாவுக்கு ஸ்டெதஸ்கோப் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும், அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், இனிப்புகள் வழங்கியும் BMS நிர்வாகிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
“முயற்சி செய்தால் இலக்கை அடையலாம்”
பாராட்டு விழாவில் மாணவி சஞ்சனா பேசுகையில், நீட் தேர்வு கடினமானது என்று நினைப்பது தவறு என்றும், தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெற்றால் இலக்கை அடைய முடியும் என்றும் தெரிவித்தார்.
தனது தந்தை BMS நிர்வாகியாக இருக்கும் நிலையில், அவருடன் பணியாற்றும் நிர்வாகிகள் தன்னை அழைத்து பாராட்டியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் சஞ்சனா கூறினார்.
