ஆட்சித் தலைமைப் பொறுப்பில் மோடியின் 25 ஆண்டுகள்
புதுடெல்லி: குஜராத் முதல்வர் முதல் இந்திய பிரதமர் வரை தொடர்ந்து 25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருந்து பொது சேவை ஆற்றியுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் குறித்து ஸ்ரீ ராமச்சந்திர மிஷன் தலைவர் கமலேஷ் படேல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற மோடி, 2026-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதியுடன் அரசு தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த மைல்கல்லையொட்டி கமலேஷ் படேல் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
“அரசியல் தலைவருடன் ஆன்மிகப் பக்குவமும் கொண்டவர்”
பிரதமர் மோடி வெறும் அரசியல் தலைவர் மட்டுமல்ல என்றும், ஆன்மிகப் பக்குவமும் தீர்க்கமான தலைமைத்துவமும் ஒருங்கிணைந்தவர் என்றும் கமலேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி இந்தியாவின் பல பகுதிகளுக்கும், இமயமலைப் பகுதிகளுக்கும் பயணம் செய்ததாகவும், சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு சேவையை தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொண்டர், அமைப்பாளர், குஜராத் முதல்வர், பிரதமர் என பொறுப்புகள் மாறியபோதும், சேவை மனப்பான்மை தொடர்ந்து ஒரே மாதிரியாக இருந்ததாக கமலேஷ் படேல் கூறியுள்ளார்.
மோர்பி பேரழிவில் சேவை
1979-ம் ஆண்டு மோர்பி அணை உடைந்தபோது ஏற்பட்ட பேரழிவுக்குப் பின்னர், மோடி மீட்புப் பணிகளில் தன்னார்வலராக ஈடுபட்டதாக கமலேஷ் படேல் குறிப்பிட்டுள்ளார்.
2024-ம் ஆண்டு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டபோது, மோர்பி அனுபவம் அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை புரிந்துகொள்ள உதவியதாக அவர் கூறியதையும் கமலேஷ் படேல் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரயில் பயணத்தில் நடந்த சம்பவம்
1990-ம் ஆண்டு டெல்லியில் இருந்து அகமதாபாத் சென்ற ரயில் பயணத்தில், இரண்டு பெண் ரயில்வே அதிகாரிகளுக்கு உறுதி செய்யப்பட்ட படுக்கை வசதி கிடைக்காத நிலையில், மோடியும் சங்கர்சிங் வகேலாவும் தங்களது முதல் வகுப்பு படுக்கைகளை விட்டுக்கொடுத்ததாக கமலேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
இருவரும் ரயில் பெட்டியின் தரையில் துணியை விரித்து தூங்கியதாகவும், அந்தப் பெண்களுக்கு படுக்கைகளை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தை பிறரின் சிரமத்தை உணர்ந்து உதவும் மனப்பான்மைக்கான உதாரணமாக கமலேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
2001-ல் குஜராத் முதல்வர் பொறுப்பு
2001-ம் ஆண்டு குஜராத் கடுமையான நிலநடுக்கத்தின் தாக்கத்தில் இருந்தபோது, 51 வயதான மோடி முதல்வராக பொறுப்பேற்றதாக கமலேஷ் படேல் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது அவருக்கு தேர்தல் அரசியலிலும் நிர்வாகத்திலும் நேரடி அனுபவம் குறைவாக இருந்ததாகவும், பல்வேறு கேள்விகள் எழுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், அந்த பொறுப்பை ஏற்று செயல்பட்டதாகவும் கமலேஷ் படேல் கூறியுள்ளார்.
பிரதமராக எதிர்கொண்ட சவால்கள்
2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, தேசிய பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை மோடி எதிர்கொண்டதாக கமலேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று, உக்ரைன் போர், மேற்கு ஆசியப் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச சவால்கள் நிறைந்த காலகட்டத்திலும், நாட்டின் தலைமையை ஏற்று செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கர்மயோகியாக செயல்படுகிறார்”
பயம் மற்றும் சுயலாபம் இல்லாமல், உறுதியான நம்பிக்கையுடன் மக்கள் சேவையில் ஈடுபடுவது மோடியின் பயணத்தில் முக்கிய அம்சமாக இருப்பதாக கமலேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
சேவை, நோக்கம், உறுதி மற்றும் துணிவு ஆகிய பண்புகள் மோடியின் 25 ஆண்டு பொது வாழ்க்கையை வடிவமைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த 25 ஆண்டு பயணம் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்றும் கமலேஷ் படேல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரதமர் மோடிக்கு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும் என்றும், நாட்டை மேலும் உயரங்களுக்கு கொண்டு செல்ல அவர் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்றும் கமலேஷ் படேல் வாழ்த்தியுள்ளார்.
