பிஷ்கெக்: பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் எந்தவித இரட்டை நிலைப்பாட்டிற்கும் இடமளிக்கக் கூடாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும் என்றார். பயங்கரவாதத்தின் முழுமையான கட்டமைப்பை தகர்க்க வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்ட அவர், அதற்கான நிதியுதவி, ஆள்சேர்ப்பு மற்றும் புகலிடங்கள் ஆகியவற்றையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடர்பான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் பாதுகாப்பு, இணைந்து செயல்படுதல், வாய்ப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இரட்டை நிலைப்பாடுகள் இருக்கக்கூடாது என்றும், அனைத்து நாடுகளும் இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், போர்கள் மற்றும் மோதல்களுக்கு போர்க்களத்தில் தீர்வு காண முடியாது என்றும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகள் மூலமே பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
வர்த்தகத்தை எளிதாக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், மக்கள் இடையிலான உறவுகளுக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
